Thursday 28 December 2017

ஸ்ரீ சிவ சித்தர் சின்னகுஞ்சி அம்மா அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் அற்புத மகிமைகள்



திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுக்கா பூந்தோட்டம் அஞ்சல் மேலருத்திர கெங்கை ஸ்ரீ சிவ சித்தர் சின்னகுஞ்சி அம்மா அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் அற்புத மகிமைகள்

ஸ்ரீ சிவ சித்தர் சின்ன குஞ்சி அம்மா என்று எல்லோரையும் அன்பாக அழைக்கப்படும். அம்மாவின் இயற்பெயர் தேவகி ஆகும். மேலருத்திர கெங்கையை சேர்ந்த கிட்டு, ஜெகதம்பாள் தம்பதியருக்கு மூன்றாவது மகளாக பிறந்ததால் இவர் சின்னகுஞ்சி என்று செல்லமாக அழைக்கப்பட்டு வந்தார். இவர் பிறந்தது வளர்ந்தது எல்லாம் மேலருத்திர கெங்கை என்ற கிராமம்தான். இவர் தந்தையார் தென்னக இரயில்வேயில் பணியாற்றினார். அம்மா படித்தது, பூந்தோட்டத்தில் உள்ள சரஸ்வதி வித்யாலையா உதவிப்பெறும் நடுநிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு வரை பயின்றார். இவர் உடன் பிறந்தவர்கள் இரண்டு மூத்த சகோதரிகள் மட்டுமே. அம்மாவிற்கு திருமண வயது வந்ததும் தஞ்சாவூர் மாவட்டம், திருவையார் அருகே உள்ள பொண்ணாவரை என்ற கிராமத்தை சேர்ந்த சாமிநாதன் என்ற நபருக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆனால் அம்மாவிற்கு திருமண வாழ்க்கை எதிர்பார்த்தபடி நல்லபடியாக அமையவில்லை. அதனால் அம்மா அவர்கள் குடும்ப வாழ்க்கையை வெறுத்து குடும்பத்தைவிட்டு வெளியேறி தனது பிறந்த ஊரான பூந்தோட்டத்திற்கு அருகில் உள்ள மேலருத்திரகெங்கைக்கு திரும்பவும் வருகிறார். அப்படி வந்த அம்மா அவர்கள் தன் சொந்த பந்தங்களின் வீட்டிற்கு செல்லாமல் 34 கூத்தனூர் என்ற கிராமத்தில் உள்ள வயல்வெளியில் வேப்ப மரத்தடியில் பெரும்பாலும் தங்கி வந்தார். காடுகளிலும் மழை வெயில் என்று பாராமல் பனி என்று பாராமல் நீண்ட நாள் வேப்பமரத்தடியில் தங்கி வந்தார். அவர் யாரிடமும் எதையும் பேசாமல் எதையும் கேட்காமல் கூத்தனுர் கிராம வயல்வெளிகளை சுற்றி திரிந்த வண்ணமும் இருந்தார். அவர் எப்படி உறங்குகிறார் எப்படி சாப்பிடுகிறார் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் சில நேரங்களில் சில வீடுகளுக்கு சென்று ஆச்சி என்று உரிமையாகவும் கனிவுடனும் அந்த வீட்டு அம்மாவை அழைத்து எனக்கு பழைய சாதம் இருந்தால் கொடுங்கள் என்று கேட்டு சாப்பிடுவார். இவ்வாறாக வாழந்து வந்த அம்மா அவர்கள் தினமும் 10 கிலோ மீட்டர் தூரம் நடப்பது வழக்கம். அப்பொழுதெல்லாம் அம்மாவை யாரும் பொருட்படுத்தவில்லை. சிலர் அம்மாவை கேவலமாக பார்த்தனர். சிலர் பைத்தியம் என்றனர். சிலர் அம்மாவை கற்களால் அடிக்கவும் செய்தனர். ஆனால் அம்மா இதையெல்லாம் சிரிதும் பொருட்படுத்தாமல் யாரையும் எதுவும் கூறாமல் அமைதியாகவே வாழ்ந்து வந்தார். வருடங்கள் சில கடந்தன. அம்மாவின் தலைமுடிகள் ஜடாமுடியாக மாறியது. அவர்களின் ஆடைகள் நைந்து கிழிந்தது. நிர்வான நிலையை அடைந்தார். அதையெல்லாம் அம்மா சிறிதும் பொருட்படுத்தவில்லை. முற்றும் துறந்த முனிவர் நிலையை அடைந்தார். இது ஊர் மக்களுக்கு அருவருப்பாக தெரிந்தது. இவ்வாறு வாழ்ந்து வந்த அம்மாவை காண பல வெளி ஊர்களிலிருந்து சித்தர் வழிபாட்டில் உள்ள பக்தர்கள் காண வந்தார்கள். பல பேர் அம்மாவிடம் ஆசிப்பெற்று செல்வது வழக்கம். நாட்கள் ஆக ஆக நிறைய பக்தர்கள் அம்மாவை காண வந்தார்கள். அதை பார்த்த ஊர் மக்கள் ஏன் இவரை வந்து பார்த்து வணங்கி செல்கிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு அவர்கள் என்னை அம்மா கனவில் வந்து அழைத்தார்கள். என்னை வந்து பார் என்று கூறினார்கள் என்று சொல்வார்கள். என்னை வந்து பார் என்று கூறினார்கள் என்று சொல்வார்கள். தமிழ்நாடு மட்டும் அல்ல இந்தியா முழுவதும் இருந்தும் மலேசியாவில் இருந்தும் வந்து அம்மாவை வணங்கி ஆசிப்பெற்று சென்றனர். அதனால் அம்மாவின் புகழ் எங்கும் பரவியது. அம்மாவை பார்த்து அவரிடம் ஆசிப்பெற்று சென்றால் தங்களின் எந்த ஒரு தீராத பிரச்சனையும் தீர்வதாகவும் தீர்ந்து வருவதாகவும் பக்தர்கள் நம்பினார்கள். இவ்வாறு தன்னை நம்பிய பக்தர்களின் எந்த ஒரு பிரச்சனைகளையும் அம்மா அவர்கள் தீர்த்து வந்தார். சித்தர்கள் தான் வாழும் பொழுது தான் வாழ்ந்த இடத்தில் எதையாவது ஒன்றை தோற்றுவிப்பார்கள் அந்த வகையில் தான் நீண்ட நாள் தவம் புரிந்த 34, கூத்தனூர் வயல்வெளியில் வேப்பமரத்தடியில் அந்த இடத்திற்கு சொந்தகாரரான சுதாகர் என்ற தன் பக்தரை அழைத்து அய்யா நான் அமர்ந்த இடத்தில் ஷீரடி சாய்பாபாவிற்கு ஆலயம் ஒன்று அமைக்க வேண்டும் என்று கூறினார். அவர் கூறியபடியே அந்த இடத்தில் 12.6.2011 ம் வருடம் அம்மா அவர்களின் பொற்கரங்கலாலையே பூமி பூஜை போட்டு ஆரம்பித்து வைத்தார்கள். அந்த ஆலயத்திற்கு அம்மா அவர்கள் வைத்த பெயர் ஸ்ரீ சிவசித்தர் ஷீரடி சாய்பாபா என்று தான் பூமி பூஜை போட்ட அன்றே அம்மா கையால் அன்னதானத்தையும் ஆரம்பித்து வைத்தார்கள். (அம்மா அன்று கூறினார்கள் யார் ஒருவர் 34 கூத்தனூர் ஸ்ரீ சிவ சித்தர் ஷீரடி சாய்பாபாவின் இந்த ஆலயத்தில் அடி எடுத்து வைக்கிறார்களோ அவர்களின் எந்த ஒரு தீராத பிரச்சனைகளையும், கோரிக்கைகளையும், வேண்டுதல்களையும் ஸ்ரீ சிவ சித்தர் ஷீரடி சாய்பாபா அவர்கள் நிறைவேற்றி தருவார் பாபாவை வணங்குங்கள் என்று கூறினார். அவர் ஆரம்பித்து துவங்கி வைத்த அந்த ஸ்ரீ சிவ சித்தர் ஷீரடி சாய்பாபாவின் புகழை கேள்விப்பட்டு வியாழக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பாபாவின் ஆசி பெற்றும் அம்மாவின் ஆசிப்பெற்றும் செல்கிறார்கள். எங்கு சென்றும் தீராத எந்த ஒரு பிரச்சனையும் ஸ்ரீ சிவ சித்தர் ஷீரடி சாய்பாபாவின் ஆலயம் வந்து பாபாவை வணங்கி சென்றால் தீர்கிறது என்கிறார்கள் பக்தர்கள். இங்கு வந்து மன நிம்மதியுடன் செல்கின்றனர். வியாழக்கிழமை முழுவதும் இங்கு வரும் பக்தர்களுக்கு இங்கு வரும் பக்தர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேற வேண்டியும் கோரிக்கை நிறைவேறியதன் பெயரிலும் அன்னதானம் செய்து வருகிறார்கள். அம்மா அடிக்கடி கூறுவார்கள் என்னை வணங்க வேண்டார். பாபாவை வணங்குங்கள் என்றும் பாபாவை ஏன் பாபாவை வணங்க சொல்கிறார் என்றும் பிறகுதான் தெரிந்தது. ஆட்கொண்டு உள்ளார் என்று அம்மாவை பாபா ஆட்கொண்டு அருள்பாலித்து வருகிறார் என்பதற்கு பாபா ஷீரடியில் நிகத்திய சில அற்புதங்களை அம்மா பூந்தோட்டத்தில் நிகழ்த்தி வருகிறார் என்பதற்கு சில சான்றுகள்.

1. ஷீரடி சாய்பகவான் நோயை விரட்ட கோதுமை மாவை அரைத்து ஊரின் எல்லையில் கொட்டி நோயை விரட்டுவார். அதேப்போல் அம்மாவும் சில வீடுகளுக்கு சென்று அரிசி, பருப்பு, கடைகளுக்கு சென்று காய்கறி, பழங்கள், காசு ஆகியவற்றை பிச்சையாக பெற்று அதை ஊரின் எல்லையில் கொட்டுவார்.

2. பாபா தனக்கு தேவையான உணவை பிச்சையாகப் பெற்று உண்டு வந்தார். அதேப்போல் சித்தர் அம்மாவும் தனக்கு தேவையான உணவை பிச்சையாகப் பெற்று உண்டு வருகிறார்.

3. பாபா எப்பொழுதும் குளித்தது கிடையாது அதேப்போல் அம்மாவும் பல் துலக்குவதோ குளிப்பதோ கிடையாது. அம்மா குளிக்காமல் இருந்தப் போதும். இதுவரை அம்மாவின் மீது சிறு துர்நாற்றம் என்பதே வந்தது கிடையாது. மாறாக விபூதி வாடையே வருகிறது.

4. பாபா அமர்ந்து இருக்கும் துவாரஹா மாயியில் எப்பொழுதும் நெருப்பு (துணி) எரிந்து கொண்டே இருக்கும் அதேப்போல் அம்மாவின் இருப்பிடத்திலும் எப்பொழுதும் நெருப்பு எரிந்து கொண்டே இருக்கும்.

5. பாபா தனது பக்தர்களின் கனவில் தோன்றி பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்வார். அதேப்போல் அம்மாவும் தன் பக்தர்களின் கனவில் தோன்றி பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்வார்.

6. பாபா தன்னை பார்க்க வரும் பக்தர்களுக்கு அன்னதானம் கொடுப்பார். அதேப்போல் அம்மாவும் தன்னை பார்க்க வரும் பக்தர்களை உணவு உண்ணாமல் அனுப்புவது கிடையாது.

7. பாபா தன் பக்தர்களை விஷ ஜந்துக்கள் தீண்டினால் அந்த விஷத்தை இறங்க செய்ய கடுமையக கோபம் கொண்டு கடுமையான வார்த்தைகளால் திட்டியே விஷத்தை இறங்க செய்வார். அதேப்போல் அம்மாவும் தன் பக்தர்களுக்கு விஷம் தீண்டினால் கடுமையான வார்த்தைகளை கூறி திட்டுவார். சிறிது நேரம் கழித்த பார்த்தால் விஷம் இறங்கி பூரண குணமாக செல்வார்கள். அம்மா கடுமையாக திட்டும் போது யார் சுற்றி இருந்தாலும் அதெல்லாம் அம்மா கண்டு கொள்ளமாட்டார். தன்னுடைய பக்தர் குணமாகும் வரை கடுமையாக திட்டிக் கொண்டே இருப்பார்.

8. பாபா காசு பணத்திற்கு ஆசைப்படாதவராக இருப்பார் ஆனால் சில பக்தர்களிடம் சில பைசாக்களை காணிக்கையாகப் பெற்று அதை சிலருக்கு கொடுத்துவிடுவார். அதேப்போல் சித்தர் அம்மாவும் எல்லோரிடமும் காசு பணம் கேட்க மாட்டார். ஒரு சில பக்தர்களிடம் சில பைசாக்களையும், சில ரூபாய் நோட்டுகளையும் வாங்கி தான் வைத்துக் கொள்ள மாட்டார். அதை ஒரு சிலரிடம் கொடுத்து விடுவார்.

9. பாபா தன்னை பார்க்க வரும் சில பக்தர்களிடம் புகையிலை கேட்பார். அதேப்போல் அம்மாவும் தன்னை காணவரும் சில பக்தர்களிடம் புகையிலையும், மூக்குப்பொடியும், தீப்பெட்டியும் கேட்பார்.

10. பாபா ஒரு பொழுதும் தன்னை கடவுள் என்றும் நான் கடவுளின் அவதாரம் என்றும் கூறு-யது கிடையாது. அதேபோல் சித்தர் அம்மாவும் தன்னை ஒரு பொழுதும் கடவுள் என்று கூறியது கிடையாது.

11. பாபா எப்பொழுதும் வேப்பமரத்தடியிலும் பாலடைந்த மசூதியிலும் அமர்ந்து இருப்பார். அதேப்போல் சித்தர் அம்மாவும் வேப்பமரத்தடியிலும் பழைய கோவில்களிலும் அமர்ந்து இருப்பார்.

12. பாபா எப்பொழுதும் ஷீரடி கிராமத்தை சுற்றியே வலம் வந்த வண்ணம் இருப்பார் அதேபோல் சித்தர் அம்மாவும் பூந்தோட்டம் சுற்ற உள்ள சில கிராமங்களை வலம் வந்த வண்ணம் இருப்பார்.

13. பாபா தன்னை காண வரும் ஒரு சில பக்தர்களை சிவனை வணங்கு, இராமரை வணங்கு, விநாயகரை வணங்கு என்று கூறுவார் அதேபோல் அம்மாவும் சில தெய்வங்களை வணங்கு என்று கூறுவார். குறிப்பாக ஷீரடி சாய்பாபாவை வணங்கு என்று கூறுவார்கள். அவர் சொன்னபடி பக்தர்கள் அந்த கடவுளை வணங்கினால் அவர்களின் பிரச்சனைக்கு அது தீர்வாக அமைகிறது. ஒருபோதும் தன்னை வணங்குமாறு அம்மா கூறியது கிடையாது.

14. இயற்கையின் சீற்றங்களை பாபா தீர்க்கதரிசியாக முன்னதாகவே பாபா கூறுவது வழக்கம். அதேப்போல் அம்மாவும். வெள்ளம். புயல். சுனாமி. பேருந்து விபத்து, குண்டுவெடிப்பு போன்றவற்றை முன்கூட்டியே சூட்சமாக தெரிவிப்பார்.

15. பாபா துவாரகாமாயில் அமர்ந்து கொண்டே எங்கோ தனது பக்தர்களுக்கு ஏற்பட இருக்கும் பிரச்சனைகளை பேசிய வண்ணம் இருப்பார். அதேபோல் அம்மாவும் எங்கோ தனது பக்தனுக்கு நடக்கும் ஆபத்துக்களை கொஞ்சம் கோபமாக கூறி கொண்டே இருப்பார்.
எனவே இவ்வாறாக சித்தர் அம்மா சின்ன குஞ்சி அவர்கள் ஷீரடி சாய்பாபாவுடன் உள்ள தொடர்பையும், பாபா தன்னை ஆட்கொண்டு உள்ளார் என்பதையும் சூட்சமாக தன்னை காணவரும் சாய்பாபா பக்தர்களுக்கு தெரியப்படுத்த தவறுவதும் அல்ல சிலர் அம்மாவை சாய்மாதா என்றே கூறுவார்கள்.

இந்த கலியுகத்தில் எத்தனையோ போலி சாமியார்கள் தன்னை கடவுளின் அவதாரம் என்றும் நான் கடவுளின் தூதுவன் என்றும் கூறிகொண்டும் சில சித்து வேலைகளை கற்றுக்கொண்டு தன்னை காணவரும் பாமர மக்கள் மட்டும் அல்லாமல் நன்கு படித்தவர்களையும் தங்கள் மாய வலையில் சிக்க வைத்து அவர்களிடம் இருந்து சில லட்சங்களை காணிக்கையாக வாங்கி கொண்டு .சி. காரில் வலம் வந்து கொண்டும் தன்னை காண சில குறிப்பிட்ட நேரத்தில்தான் வர வேண்டும் என்றும், முன் அனுமதி பெற்றுக்கொண்டும் மாத கணக்கில் காத்துக் கொண்டும் இருக்க செய்ய அக்கபோர்களுக்கு மத்தியில் இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து கொண்டும், உடம்பில் ஒரு ஒட்டு துணி கூட இல்லாமல் கடுமையான பனி. கடுமையான மழை, கடுமையான வெயில், கடுமையான கொசு கடி என்று பாராமல் தன்னை சுற்றி எப்பொழுதும் நாய்களும், ஆடுகளும் சூழந்து இருக்க தன்னை காண வரும் தன் பக்தர்களை ஏழை, பணக்காரன், ஜாதி மதம், வேண்டியவர், வேண்டாதவர், பெரியவர்கள், குழந்தைகள் என எந்த வேறுபாடும் இல்லாமல் அனைவரையும் வாங்க அய்யா வாங்க ஆச்சி என்று கருணையன பார்வையால் வரவேற்று அமர சொல்வார்.

இதுவரை எத்தனையோ ஆயிரக்கணக்கான பக்தர்கள் சித்தர் அம்மாவை பார்த்து தங்களின் தீராத பிரச்சனைகளை எந்தவிதமான காசு பணம் பொருள் வாங்காமல் தீர்த்து வைக்கும் ஸ்ரீ சிவ சித்தர் சின்னகுஞ்சி அம்மாவின் அருளைப் பெற்றால் சகல தேசங்களும் நோய்களும் விலகும் விலகி வருகிறது என்பது கலியுகத்தின் கண்கண்ட உண்மையாகும்.

குறிப்பு :
ஸ்ரீ சிவசித்தர் சின்னகுஞ்சி அம்மா அவர்கள் எந்தவிதமான காசு பணம், பொருள் நகைகளுக்கு ஆசைப்படாதவர் எனவே யாரிடமும் நீங்கள் காசு பணம் கொடுக்காமல் எப்பொழுது வந்தாலும் அம்மாவை அனைவரும் எளிமையாக பார்த்து அவர்களின் ஆசியைப் பெற்று செல்லலாம். அம்மாவை அன்று பைத்தியம் என்றார்கள். ஆனால் இன்றோ அவர்களை வைத்தியர் என்கிறார்கள். அன்று அம்மாவை பைத்தியம் என்று விரட்டி அடித்தவர்கள் எல்லாம் இன்று அம்மாவின் பின் பைத்தியமாக உள்ளார்கள்.


குருகடாச்சம் பரிபூரணம்.

No comments:

Post a Comment